பிளாக்பஸ்டர் ஹிட்
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்த திரைப்படம் “மதகஜராஜா”. இதில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் சந்தானம், மனோபாலா, மணிவண்ணன், மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இத்திரைப்படம் உருவாகி 12 வருடங்கள் ஆகிறது. அதாவது 2012 ஆம் ஆண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு அந்த சமயத்தில் திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனத்திற்கு கடன் சுமை அதிகமாக இருந்ததால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.
மறந்துப்போன ரசிகர்கள்
“இத்திரைப்படம் எப்போது வெளியாகும்?” என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இத்திரைப்படத்தின் வெளியீடு பல ஆண்டுகளாக தள்ளிப்போய்க்கொண்டிருந்த நிலையில் இத்திரைப்படத்தை ஒரு கட்டத்தில் ரசிகர்கள் மறந்தே போய்விட்டனர். இந்த நிலையில்தான் “விடாமுயற்சி” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போன நிலையில் திடீரென “மதகஜராஜா” வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.
ஆச்சரியத்தில் திரையுலகம்
இவ்வாறு 12 வருடங்கள் கழித்து வெளியாகியுள்ள “மதகஜராஜா” திரைப்படம் எதிர்பாராவிதமாக மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சுந்தர் சியின் ஸ்டைலில் உருவான ஆக்சன் காமெடி திரைப்படம் இது. இந்த Genre-ல் சமீப காலமாக எந்த திரைப்படமும் வெளிவரவில்லை. மேலும் இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த காரணங்களால் இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. 12 வருடங்கள் கழித்து வெளியான திரைப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா? என திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

அலைமோதும் கூட்டம்
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் 2 ஆவது முறை “மதகஜராஜா” திரைப்படத்தை பார்க்க உள்ளதாக திரையரங்கு வாசலில் நின்றவாறு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அலைகடலென மக்கள் ஆரவாரத்தோடு “மதகஜராஜா” திரைப்படத்தை பார்க்க திரையரங்கிற்குள் ஓடுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
#MadhaGajaRaja count 2 at Devi…crowd on firee ??? pic.twitter.com/d8YoVkshE8
— Raunaq Mangottil (@RaunaqMangottil) January 15, 2025