இயக்குனர் இமயம்
தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக கருதப்படுபவர்தான் பாரதிராஜா. இவர் இயக்குனராக அறிமுகமாகிய “16 வயதினிலே” திரைப்படம் அது வரையிலான தமிழ் சினிமாவின் போக்கையே திசை திருப்பியது என்று கூறலாம்.
ஹீரோவுக்கான தேடல்

“16 வயதினிலே”, “கிழக்கே போகும் ரயில்”, “அலைகள் ஓய்வதில்லை” போன்ற வெற்றித் திரைப்படங்களை தொடர்ந்து 1983 ஆம் ஆண்டு மீண்டும் கிராமத்து வாழ்வியல் சார்ந்த ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான முயற்சியில் பாரதிராஜா இருந்தார். அத்திரைப்படத்திற்கான நடிகை, துணை நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீசியன்கள் ஆகியோர் தயாராக இருக்க ஒரு புதுமுக ஹீரோவை அறிமுகப்படுத்த வேண்டும் என பாரதிராஜா நினைத்தார்.
அதன் படி புதுமுக கதாநாயகனுக்கான தேடல் தொடங்கியது. மதுரை பகுதியில் பல கல்லூரிகளில் யாராவது ஒரு பையன் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் இருந்தால் கூட்டிக்கொண்டு போய்விட வேண்டியதுதான் என நினைத்தார். ஆனால் அவரது விருப்பப்படி எதுவும் அமையவில்லை. இதற்கிடையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு தேடலை தொடங்கலாம் என சிந்தித்தார் பாரதிராஜா.
வளையல் கடைக்காரர்
பாரதிராஜா மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசித்துவிட்டு வெளியே வரும்போது அவரை பார்க்க கூட்டம் கூடியிருந்தது. அப்போது அங்கே மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் வளையல் கடை வைத்திருந்த ஒரு இளைஞர் அவரை பார்ப்பதற்காக கூட்டத்திற்கு நடுவில் நின்றுகொண்டிருந்தார். சட்டென்று முடிவெடுத்த பாரதிராஜா அந்த இளைஞரை தனது காருக்குள் ஏற்றிக்கொண்டு போய்விட்டார். இந்த இளைஞன் தான் நம் படத்தின் ஹீரோ என முடிவு செய்து “மண் வாசனை” திரைப்படத்தில் அந்த இளைஞரை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அவர் தான் நடிகர் பாண்டியன்.
