இயக்குனர் இமயம்
தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் மிகவும் முக்கியமான இயக்குனராக கருதப்படுபவர் பாரதிராஜா. இவர் முதன் முதலில் இயக்கிய “16 வயதினிலே” திரைப்படம் அது வரையிலான தமிழ் சினிமாவின் போக்கையே திசை திருப்பியது. ஸ்டூடியோக்களில் மட்டுமே உருவாகி வந்த தமிழ் சினிமாவை கிராமத்து அழகியலுக்கு கொண்டு வந்தவர்.
அலைகள் ஓய்வதில்லை
1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் கார்த்திக், ராதா என இருவரும் ஜோடியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள். ஒரு இந்து பிராமண குடும்பத்தைச் சேர்ந்த ஆணுக்கும் ஒரு கிறுஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே காதல் பற்றிக்கொள்ள இருவரின் குடும்பங்களும் எப்படி பற்றிக்கொள்கிறது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதை.

கதையை மாற்றிய பாரதிராஜா
முதலில் ஒரு இந்து ஆணும் ஒரு இஸ்லாமிய பெண்ணும் காதலிப்பதாகத்தான் “அலைகள் ஓய்வதில்லை” திரைப்படத்தின் கதையை வடிவமைத்திருந்தார்களாம். ஆனால் இஸ்லாமிய சமூகத்திடமிருந்து எதிர்ப்பு வரும் என்ற காரணத்தினால் இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்திற்கு பதில் கிறுஸ்துவ பெண் என்று மாற்றிக்கொண்டாராம் பாரதிராஜா. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆயிரம் தாமரை மொட்டுக்களே” பாடலில் கூட “கோயிலிலே காதல் தொழுகை” என்ற வரி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது என சினிமா தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.