சீயான்
இயக்குனர் பாலாவின் முதல் திரைப்படமான “சேது” திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது என சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்போம். விக்ரமிற்கு சீயான் என்ற பட்டத்தை பெற்று தந்ததே “சேது” திரைப்படம்தான். எனினும் தனது மகனான துருவ் விக்ரமை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்த விக்ரம் பாலாவை நாடி வந்ததில் தொடங்கியது இருவருக்குள்ளான மனஸ்தாபம்.

வர்மா
நடிகர் விக்ரம் தனது மகனான துருவ் விக்ரமை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்த தெலுங்கில் சக்கை போடு போட்ட “அர்ஜூன் ரெட்டி” திரைப்படத்தை ரீமேக் செய்ய முடிவெடுக்க அத்திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கினால் நமது மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே என்று நினைத்தார். தன்னுடைய சினிமா கெரியர் உச்சத்திற்கு செல்ல பாலா எப்படி காரணமாக இருந்தாரோ அது போல நமது மகனின் வளர்ச்சிக்கும் அவர் காரணமாக இருப்பார் என்று விக்ரம் நம்பியதாக தெரிய வருகிறது.
அந்த நிலையில் விக்ரம் பாலாவை அணுக, பாலாவும் ரீமேக் திரைப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். அதன்படி “வர்மா” திரைப்படம் உருவான நிலையில் அத்திரைப்படத்தை பார்த்த விக்ரமிற்கு திருப்தியில்லை. ஆதலால் அந்த புராஜெக்ட் பாலாவின் கைகளில் இருந்து வேறு ஒரு இயக்குனருக்கு மாறியது. இதில் இருந்துதான் விக்ரமிற்கும் பாலாவிற்கும் இடையே சிறு உரசல் ஏற்பட்டது.
பாலாவுக்கு அந்த கடமை இல்லையா?
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம், “சமீபத்திய பாலாவின் பேட்டி ஒன்றை பார்த்தபோது அவர் விக்ரமால் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. வேறு ஒரு மொழியில் வந்த திரைப்படத்தை ரீமேக் செய்ய சொல்லி பாலாவிடம் கொண்டு சென்றதனால்தான் துருவ் விக்ரமை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் சரியாக உருவாகாதது போல் தெரிகிறது. ஒரு வேளை பாலா அவரது சொந்த கதையில் துருவ் விக்ரமை நடிக்க வைத்திருந்தால் இந்நேரம் துருவின் எதிர்காலம் பிரகாசமாக இருந்துருக்குமே?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “மொழி மாற்றக் கதையை இயக்கச் சொல்லி விக்ரம் பாலாவை கேட்டுக்கொண்டது சரி இல்லை என்றே வைத்துக்கொண்டாலும், தொடக்கத்திலேயே இத்திரைப்படத்தை தான் இயக்கினால் சரியாக வராது என்று விக்ரமிற்கு சொல்ல வேண்டிய கடமை பாலாவுக்கு இல்லையா?” என்று கிடுக்குபிடி கேள்வியை பதிலாக அளித்தார்.