சாக்லேட் பாய்
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. இளம் பெண்களின் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டம் உண்டு. 1990களில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த அரவிந்த்சாமி, ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிக்கொண்டார்.

எனினும் 2013 ஆம் ஆண்டு கடல் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். ஆனால் “தனி ஒருவன்” திரைப்படத்தில் அவர் நடித்த சித்தார்த் அபிமன்யூ என்ற வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தனி ஒருவன் ரீமேக்…
“தனி ஒருவன்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இத்திரைப்படம் தெலுங்கில் “துருவா” என்ற பெயரில் ரீமேக் ஆனது. இத்திரைப்படத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்திருந்தார். இதிலும் வில்லன் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார்.

அது நல்லா இல்லை…
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்ற அரவிந்த்சாமியிடம் சித்ரா லட்சுமணன், “தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தை தெலுங்கில் நடிக்கும்போது எப்படி இருந்தது?” என கேட்டார்.
அதற்கு அரவிந்த்சாமி “நல்லாவே இல்லை” என பதிலளித்தார். “ஏன்?” என கேட்டபோது, “அந்த கதாபாத்திரம் முடிந்துவிட்டது. தனி ஒருவன் படத்தில் அந்த கதாபாத்திரம் மெருகேற்றப்பட்டு கொண்டு வரப்பட்டது. அதனை பார்த்து அதே மாதிரியே மீண்டும் நடிக்க வேண்டும் என்று கேட்டால் என்னால் நடிக்க முடியாது. அதுவுமில்லாமல் தெரியாத மொழியில் வசனம் பேசும்போது அந்த உணர்ச்சியை நடிப்பில் கொண்டு வருவது சிரமம்” என்று தன்னுடைய பதிலுக்கு விளக்கம் கொடுத்தார் அரவிந்த்சாமி.