திடீரென நெஞ்சுவலி…
இசைப்புயல் என போற்றப்படுபவரும் ஆஸ்கர் போன்ற பல உயரிய விருதுகளை வென்று உலகளவில் சாதனை படைத்தவருமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தீடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டதாகவும் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் நலமாக வீட்டிற்கு திரும்பியதாகவும் செய்திகள் தெரிவித்தன.

நான் முன்னாள் மனைவி கிடையாது
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து பேசிய அவரது மனைவி செய்ரா பானு, “அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவருக்கு Angiography செய்யப்பட்டு இறைவனின் கருணையால் அவர் நலமாக உள்ளார்” என கூறிய அவர்,
“உங்களிடம் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் நாங்கள் இருவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை. நாங்கள் இப்போதும் கணவன்-மனைவிதான். தயவுசெய்து என்னை அவரது முன்னாள் மனைவி என்று குறிப்பிடாதீர்கள். நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்கிறோமே தவிர என்னுடைய பிரார்த்தனைகள் எப்போதும் அவருக்கு உண்டு” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான்-செயிரா பானு பிரிவு
கடந்த வருடம் நவம்பர் மாதம், ஏ.ஆர்.ரஹ்மானும் செயிரா பானுவும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். 29 வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள் இவ்வாறு அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் உடல்நிலை குறித்து பேசியுள்ள செயிரா பானு, தன்னை அவரது முன்னாள் மனைவி என்று குறிப்பிடாதீர்கள் என கூறியுள்ளார்.