பாலிவுட்டில் தடம் பதித்த முருகதாஸ்
கோலிவுட்டில் “தீனா”, “ரமணா”, “கஜினி”, “7 ஆம் அறிவு”, “துப்பாக்கி”, “கத்தி” போன்ற பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். “கஜினி” திரைப்படத்தின் மாபெரும் வெற்றி இவரை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றது. அங்கே “கஜினி” திரைப்படத்தை ஆமீர் கானை வைத்து ரீமேக் செய்தார். “கஜினி” ஹிந்தி ரீமேக் அதிரிபுதியான வெற்றியை அவருக்கு கொடுத்தது.

அதன் பின் பாலிவுட்டில் “ஹாலிடே”, “அகிரா” போன்ற திரைப்படங்களை இயக்கினார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” என்ற திரைப்படத்தை உருவாக்கி வரும் நிலையில் இதற்கிடையில் பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து “சிக்கந்தர்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் முருகதாஸ்.
அதிரடியாக உருவாகியிருக்கும் சிக்கந்தர்
சல்மான் கான் கதாநாயகனாகவும் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் “சிக்கந்தர்” திரைப்படத்தில் சத்யராஜ், காஜல் அகர்வால், சர்மான் ஜோஷி, கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு பிரீத்தம் இசையமைத்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு வெளியாகிறது.

இத்திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இத்திரைப்படத்தின் டிரைலர் 3 நிமிடங்கள் 37 வினாடிகள் நீளம் கொண்டிருந்தது. ஹிந்தி ரசிகர்கள் இத்திரைப்படத்தின் டிரைலர் மிரட்டலாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். ஆனால்…
தூக்கம் வருது முருகதாஸ்!
ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு “சிக்கந்தர்” படத்தின் டிரைலர் நிறைவை கொடுக்கவில்லை என தெரிய வருகிறது. இணையத்தில் பல தமிழ் ரசிகர்கள், “இவ்வளவு பெரிய டிரைலரா?”, “டிரைலரை பார்த்தாலே தூக்கம் வருதே” போன்ற விமர்சனங்களை அள்ளி எறிந்து வருகின்றனர். எனினும் இத்திரைப்படம் வெளிவந்த பிறகே தமிழ் ரசிகர்கள் இத்திரைப்படத்தை கொண்டாடுகிறார்களா இல்லையா என்பது தெரியவரும்.