விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் உட்பட பலரது நடிப்பில் வெளிவந்த “விடுதலை 2” திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. திரைப்படத்தில் டப்பிங் ஒழுங்காக அமையவில்லை என்றும் திரைக்கதை சுமாராக இருக்கிறது என்றும் பல விமர்சனங்கள் வெளிவந்தன. எனினும் கம்யூனிஸ சிந்தனையை மையமாக வைத்து உருவான முக்கிய திரைப்படமாக “விடுதலை 2” அமைந்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

அனுராக் காஷ்யப்
பாலிவுட்டில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து வருபவர் அனுராக் காஷ்யப். இவர் இயக்குனராக மட்டுமல்லாது பல திரைப்படங்களில் நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். பாலிவுட்டிற்கு அடுத்தபடியாக தமிழில் “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பின் “லியோ”, “மகாராஜா” போன்ற திரைப்படங்களில் நடித்த அனுராக் காஷ்யப் வெற்றிமாறனின் “விடுதலை 2” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட்டே வேண்டாம்
இந்த நிலையில் “நான் மும்பையில் இருந்து வெளியேறி தென்னிந்தியாவிற்கு செல்ல முடிவெடுத்துள்ளேன். பாலிவுட்டை நினைத்து அருவருப்படைகிறேன். பாலிவுட்டால் நான் ஏமாற்றம் அடைந்துள்ளேன். இங்கு யாரும் நடிப்பதில் கவனம் செலுத்துவது இல்லை. மாறாக நட்சத்திரங்களாகவே மாற வேண்டும் என நினைக்கிறார்கள்” என இயக்குனர் அனுராக் காஷ்யப் வேதனையடைந்துள்ளார்.