பெண் மரணம்
கடந்த 5 ஆம் தேதி அல்லு அர்ஜூன் நடித்த “புஷ்பா 2” திரைப்படம் வெளியான நிலையில் அதற்கு முந்தைய நாள் ஹைதராபாத்தில் அமைந்துள்ள சந்தியா திரையரங்கத்தில் அத்திரைப்படத்தின் பிரீமியர் ஷோ நடைபெற்றது. அந்த பிரீமியர் ஷோவில் நடிகர் அல்லு அர்ஜூன் கலந்துகொண்டார். அவரை பார்க்க அலைகடலென கூட்டம் கூடிய நிலையில் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற 35 வயது பெண் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். மேலும் அவரது 9 வயது மகன் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜாமினில் வெளிவந்த அல்லு அர்ஜூன்
இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தெலங்கானா போலீஸாரால் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதியப்பட்டு அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் அதே நாளில் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
வீட்டின் மீது தாக்குதல்
இந்த நிலையில் நேற்று ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அல்லு அர்ஜூன் வீட்டின் மீது ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்கவேண்டும் என கோஷம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 8 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.