பட்டத்தை துறந்த அஜித்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உருவான அஜித்குமார் அல்டிமேட் ஸ்டாராக தனது ரசிகர்களின் மனதிற்குள் புகுந்தார். மேலும் அவரது ரசிகர்கள் அவரை “தல” என்று செல்லமாக அழைத்தும் வந்தனர். எனினும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு “அல்டிமேட் ஸ்டார்” என்ற தனது பட்டத்தை துறந்தார் அஜித்குமார். மேலும் தன்னை “தல” என்று அழைக்க வேண்டாம் எனவும் தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
ரசிகர்களுக்கு வேண்டுகோள்
அதே போல் அஜித்குமார் தனது திரைப்படத்தின் புரொமோஷன்களில் கூட கலந்துகொள்வதில்லை. மேலும் எந்த சினிமா விழாக்களிலும் தான் கலந்துகொள்வதில்லை என முடிவெடுத்தார். அதை இன்றும் கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவின் மூலம் தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை வைத்துள்ளார் அஜித்குமார்.
கடவுளே அஜித்தே….
சமீப காலமாக அஜித் ரசிகர்களின் மத்தியில் “கடவுளே அஜித்தே” என்ற கோஷம் மிகவும் வைரலான கோஷமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரீகமாக எழுப்பப்படும் க…. அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்துள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் அதில், “எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்” எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அஜித்தின் இந்த வேண்டுகோளை சுரேஷ் சந்திரா தனது “X” தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.