இயக்குனர் அவதாரம் எடுத்த விஜய் மகன்
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் விஜய். அவரின் மகனான ஜேசன் சஞ்சய், வெளிநாட்டில் திரைப்படக்கலை பயின்றவர். ஜேசன் சஞ்சய்க்கு தான் ஒரு இயக்குனராக ஆகவேண்டும் என்ற கனவு பல வருடங்களாக இருந்து வருகிறது.
அந்த வகையில் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இதில் சந்தீப் கிசான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

நொந்துப்போன சஞ்சய்
எனினும் சில மாதங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் பொருளாதார சிக்கல்களில் தவித்தபோது ஜேசன் சஞ்சய்யின் திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் ஜேசன் சஞ்சய்க்கு விரக்தியே ஏற்பட்டுவிட்டதாம். லைகா நிறுவனத்தை விட்டுவிட்டு வேறு எதாவது நிறுவனத்திற்கு இந்த புராஜெக்ட்டை கொண்டு செல்லலாம் என தீவிரமாக யோசித்து வந்தாராம்.
உதவிக்கரம் நீட்டிய அஜித்குமார்
இந்த நிலையில் இது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அஜித்தின் மேனேஜரும் கோலிவுட்டில் மிகப் பிரபலமான PRO-ம் ஆன சுரேஷ் சந்திராவிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டாராம் ஜேசன் சஞ்சய். அந்த சமயத்தில் சுரேஷ் சந்திராவின் அருகில் அஜித்குமாரும் இருந்திருக்கிறார். “யார் பேசுறது?” என்று சுரேஷ் சந்திராவிடம் அஜித் கேட்க, “விஜய்யின் மகன்” என சுரேஷ் சந்திரா கூறியிருக்கிறார்.

உடனே அஜித்குமார் சுரேஷ் சந்திராவிடம் இருந்து தொலைப்பேசியை வாங்கி ஜேசன் சஞ்சய்யை நலம் விசாரித்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். அதன் பின் ஜேசன் சஞ்சய் விஷயத்தை கூற, அதற்கு அஜித்குமார், “உனக்கு வேறு நிறுவனத்திற்கு கதை சொல்ல வேண்டும் என தோன்றுகிறது என்றால் நானே மற்ற கம்பெனிகளுக்கு உன்னை பரிந்துரைக்கிறேன். எதுவாக இருந்தாலும் என்னை தொடர்புகொள்” என்று கூறினாராம். எனினும் சில நாட்களிலேயே ஜேசன் சஞ்சய்யின் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.