டாப் நடிகர்
“அல்டிமேட் ஸ்டார்”, “தல” போன்ற பட்டங்களை துறந்த அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர். அவருக்கு இருக்கும் கோடானு கோடி ரசிகர்களுக்கு காரணம் சினிமாவிற்காக அவர் அயராது உழைத்தது. அந்த அர்ப்பணிப்புதான் அவரை இந்த உச்சிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அஜித்குமாரின் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த ஒரு சம்பவத்தை குறித்து நடன இயக்குனர் கல்யாண் பகிர்ந்துள்ளார்.

விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் சிங்கிளான “Sawadeeka” என்ற பாடல் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
102 டிகிரி காய்ச்சல்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடன இயக்குனர் கல்யாண், “விடாமுயற்சி திரைப்படத்தில் இடம்பெற்ற Sawadeeka பாடலை படமாக்கியபோது அஜித்திற்கு 102 டிகிரி காய்ச்சல் இருந்தது. இருமிக்கொண்டே இருந்தார். அவரை நாங்கள் ஓய்வு எடுக்க சொன்னோம். ஆனால் அவரோ 40 டான்ஸர்கள் இருக்கிறார்கள், இத்தனை டெக்னீஷீயன்கள் இருக்கிறார்கள், அவர்களின் உழைப்பு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று கூறி ஆன்டி பயாட்டிக் மாத்திரைகளை உட்கொண்டு அரை மணி நேரத்தில் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்தார்” என கூறியுள்ளார்.