ஹெலிகாப்டர் விபத்து
நடிகை சௌந்தர்யா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தமிழில் “அருணாச்சலம்”, “படையப்பா”, “தவசி”, “இவன்”, “சொக்கத்தங்கம்” போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தவராக திகழ்ந்தார்.
இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒட்டி பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தனது சகோதரருடன் சௌந்தர்யா ஹெலிகாப்டரில் சென்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் உயிரிழந்தனர்.

சௌந்தர்யா கொலை செய்யப்பட்டாரா?
இந்த நிலையில் சௌந்தர்யாவுக்கு நேர்ந்தது விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை என்று தெலங்கானாவைச் சேர்ந்த எடுரு கட்லா என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதாவது ஹைதராபாத்தில் சௌந்தர்யாவுக்கு சொந்தமாக ஆறு ஏக்கர் நிலம் இருந்ததாம். இந்த நிலத்தை நடிகர் மோகன் பாபு கேட்டாராம்.

அதற்கு சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டாராம். ஆதலால் மோகன் பாபு அவர்கள் இருவரையும் கொலை செய்துவிட்டு ஹெலிகாப்டர் விபத்து போல் சித்தரித்துவிட்டதாக அப்புகாரில் எடுரு கட்லா தெரிவித்துள்ளார். மேலும் அப்புகாரில், சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் இறந்த பின்பு அந்த நிலத்தை மோகன் பாபு ஆக்கிரமித்துட்டதாகவும் அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.