தளபதி விஜய்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அவர் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியிருந்தார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு கள அரசியலில் தற்போது குதித்துள்ளார். சமீபத்தில் கூட “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. விஜய்யின் பேச்சு குறித்து பல அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வந்தனர்.

விஜய் பக்தனாக மாறிய தாடி பாலாஜி
விஜய்யின் கட்சியில் அவரது முன்னாள் ரசிகர்கள் பலரும் இப்போது தொண்டர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். அந்த வகையில் விஜய் கட்சித் தொடங்கியதில் இருந்து காமெடி நடிகர் தாடி பாலாஜி விஜய்க்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தாடி பாலாஜி தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை பச்சை குத்திக்கொண்டார். கிட்டத்தட்ட 7 மணி நேரம் பொறுமையாக அமர்ந்து விஜய்யின் முகத்தை தனது நெஞ்சில் ஏந்தியுள்ளார். இதனை குறித்து தாடி பாலாஜி மிகவும் நெகிழ்ச்சியாக பேசுகையில், “நான் பச்சை குத்திய செய்தி ஒரு வேளை விஜய்க்கு தெரிய வந்தால் நிச்சயமாக என்னை நேரில் அழைப்பார். அவரோடு நிற்கும்போது நான் பச்சை குத்திய வலி எனக்கு மறந்துபோகும்” என கூறியுள்ளார்.