படுதோல்வியடைந்த விஷால் படம்…
2022 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வினோத்குமார் என்பவரின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “லத்தி”. இத்திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். மேலும் இதில் ரமணா, பிரபு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை நடிகர் ரமணாவும் நந்தாவும் இணைந்து தயாரித்திருந்தனர். ஆனால் இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் படுதோல்வியை சந்தித்தது. இத்திரைப்படத்தை குறித்த விமர்சனங்களும் மிக சுமாராகவே வந்திருந்தன.

விஷாலின் இந்த நிலைமைக்கு நான்தான் காரணமா?
“மதகஜராஜா” வெளியான சமயத்தில் விஷாலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இது இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக ஆன நிலையில் விஷாலின் உடல் நிலை மோசமானதற்கு காரணம் “லத்தி” திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் அவருக்கு சம்பளம் தரவில்லை என்று ஒரு வதந்தி பரவியது. இது ஒரு பக்கம் என்றால், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் விஷால் “அவன் இவன்” திரைப்படத்தில் மாறுகண் தோற்றம் கொண்டவராக நடித்திருந்தார். அதனால்தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிற்று என்றும் பலர் கூறினார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட “லத்தி” படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் நந்தா, “இத்திரைப்படத்தை தயாரித்ததால் எனக்கும் விஷாலுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது உண்மைதான். ஆனால் அது ஒரு நடிகருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகத்தான் இருந்தது” என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், “விஷாலே தனக்கு அதிகளவு காய்ச்சல் இருந்ததாக கூறியும் கூட அவரது உடல் நிலை மோசமானதற்கு காரணம் நாங்கள்தான் என கூறுவது அப்பட்டமான குற்றச்சாட்டு” எனவும் கூறியுள்ளார்.
“லத்தி படத்தை தயாரிக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்துருக்கும் என நான் நினைத்தது உண்டு. எங்களுக்கு விஷாலை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. விஷாலால் அத்திரைப்படத்தை தயாரிக்க முடியாத சூழல் இருந்தது. அவர் எங்களிடம் வந்து கேட்டார். ஆதலால்தான் நாங்கள் அத்திரைப்படத்தை தயாரித்தோம்” எனவும் நந்தா அப்பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.