பொறுப்பான நடிகர்
ஆமீர்கான் தனது கெரியரின் தொடக்கத்தில் மசாலா திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட சமூக பொறுப்புடைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். “லகான்”, “3 இடியட்ஸ்” போன்ற பல திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இந்த நிலையில் ஆமீர்கான் ஆஸ்திரேலியாவில் செய்த சம்பவம் ஒன்றை குறித்து இப்போது பார்க்கலாம்.

இவர் எதுவும் லைப்ரேரி வச்சிருக்கிறாரா?
ஆமீர்கான் நடித்த ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் ஆஸ்திரேலியா சென்றிருந்தார்களாம். அப்போது அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி K சந்திரன் ஒரு புத்தக கடையில் சில புத்தகங்களை வாங்கினாராம். அவர் புத்தகத்தை வாங்கிவிட்டு வெளியே வந்தபோது ஆமீர் கான் அங்கு நின்றுகொண்டிருந்தாராம்.
கையில் புத்தகங்களோடு நின்ற ரவி K சந்திரனை பார்த்த ஆமீர்கான், அவர் வாங்கிய புத்தகங்களை ஆர்வமாக சற்று புரட்டிப்பார்த்துவிட்டு அவருடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தாராம். அதன் பின் ரவி K சந்திரன் தனது அறைக்குச் சென்றுவிட்டாராம்.

மறு நாள் ரவி K சந்திரன் அந்த புத்தக கடைக்கு மீண்டும் சென்றபோது, அந்த கடைக்காரர், “நேற்று உங்களோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தாரே, அவர் என்ன சொந்தமாக எதுவும் லைப்ரேரி வைத்திருக்கிறாரா?” என கேட்டாராம். அதற்கு இவர் “ஏன் கேட்கிறீர்கள்?” என கேட்க, அதற்கு கடைக்காரர், முந்தைய நாள் அந்த கடைக்கு வந்த ஆமீர் கான், அந்த கடையில் உள்ள மொத்த புத்தகங்களில் பாதி புத்தகங்களை வாங்கிவிட்டதாக கூறியிருக்கிறார்.
“ஆமீர் கானுடைய பல திரைப்படங்கள் அர்த்தமுள்ள திரைப்படங்களாக அமைகிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் அவருக்கிருக்கும் இந்த வாசிப்பு பழக்கம்தான்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளாராம் ரவி K சந்திரன்.