புரட்சி கலைஞர்
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ள விஜயகாந்த், காலம் உள்ளவரை மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கக் கூடியவராக திகழ்ந்து வருபவர். உதவி என்று கேட்டு வருபவர்களை வெறும் கையோடு அனுப்பாமல் அவர்களுக்கு என்ன தேவையோ அதை விட அதிகமாகவே கொடுத்து அனுப்புபவர் விஜயகாந்த். குறிப்பாக பசி என்று வருபவர்களுக்கு உணவளித்து அவர்களை மகிழ்வித்து தானும் மகிழ்விப்பவர்.
இந்த நிலையில் விஜயகாந்திற்காக எழுதப்பட்ட ஒரு கதையில் சூர்யா கதாநாயகனாக நடித்தது குறித்த ஒரு அரிய தகவலை குறித்துதான் இப்போது பார்க்கபோகிறோம்.

விஜய்காந்துக்காக எழுதிய கதை…
பல வருடங்களுக்கு முன்பு நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா, விஜயகாந்திற்காக ஒரு கதை எழுதி அதனை விஜயகாந்திடம் கூறியிருக்கிறார். ஆனால் விஜயகாந்த் அந்த கதையில் நடிக்கவில்லை.
அதன் பின் பத்து வருடங்கள் கழித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு நாள் ரமேஷ் கண்ணாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “சூர்யாவின் கால்ஷீட் இருக்கிறது. ஆனால் இரண்டு மூன்று மாதங்களாக கதை எதுவும் அமையவில்லை” என கூறியிருக்கிறார்.
அப்போது ரமேஷ் கண்ணா, பத்து வருடங்களுக்கு முன்பு விஜயகாந்திடம் கூறிய அந்த கதையை கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறினாராம். உடனே சூர்யாவையும் தயாரிப்பாளர் உதயநிதியையும் வரவழைத்து கதையை கூறியிருக்கிறார்கள். சூர்யாவிற்கு கதை மிகவும் பிடித்துப்போனதாம். அவ்வாறு உருவான திரைப்படம்தான் “ஆதவன்”. இத்திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது.
