வெளியானது எம்புரான்…
மலையாள சினிமா வரலாற்றில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் பேன் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இது இதற்கு முன்பு இதே கூட்டணியில் வெளியான “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும்.

“லூசிஃபர்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் “எம்புரான்” திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். அந்த வகையில் தற்போது இத்திரைப்படம் வெளிவந்துள்ள நிலையில் இன்று காலை காட்சியில் கூட்டம் அலைமோதியது.
எனினும் இத்திரைப்படத்திற்கான வரவேற்பில் ஒரு சிறு குழப்பம் உள்ளதாக ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
தமிழ் ஆடியன்ஸுக்கு சுமார், ஆனால்?
அதாவது இத்திரைப்படத்தை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் இத்திரைப்படம் சுமாராக இருப்பதாகவே கூறிவருகின்றனர். தமிழ்நாட்டில் முதல் காட்சியை பார்த்து முடித்துவிட்டு திரையரங்கை விட்டு வெளிவரும் ரசிகர்கள், “படம் இன்னும் கொஞ்சம் நன்றாக எடுத்திருக்கலாம்”, “முதல் பாகம் போல் இருக்கும் என்று எதிர்பார்த்து வராதீர்கள், ஏமாற்றம்தான்”, “மோகன்லாலுக்காக ஒரு முறை பார்க்கலாம்” என்று ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் கொஞ்சம் கேரளா பக்கம் திரும்பினால், அங்கே படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு வெளிவரும் ரசிகர்கள், “படம் அதிரிபுதிரியாக இருக்கிறது”, “லாலேட்டன் இன்ட்ரோ சூப்பராக இருக்கிறது”, “மலையாளத்தில் ஒரு ஹாலிவுட் திரைப்படம்” என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இது போன்ற விமர்சனங்களை கண்டுவரும் ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.