சோகத்தில் திரையுலகம்
பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு காரணமாக காலமான செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைத்துறையைச் சேர்ந்த பல நடிகர்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

“தாஜ்மஹால்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் மனோஜ். “சமுத்திரம்”, “வருஷமெல்லாம் வசந்தம்” போன்ற திரைப்படங்கள் அவரது கெரியரில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. ஆனால் அதன் பின் அவர் நடித்த திரைப்படங்கள் சரியாக போகவில்லை. ஆதலால் அவரது கெரியர் சரிவை கண்டது. 2023 ஆம் ஆண்டு “மார்கழி திங்கள்” திரைப்படத்தை இயக்கியிருந்தார் மனோஜ் பாரதிராஜா. அவருக்கு இயக்குனராக ஆகவேண்டும் என்ற துடிப்புதான் பெரும்பாலும் இருந்தது.
சிகப்பு ரோஜாக்கள் 2
மனோஜ் பாரதிராஜா தனது தந்தை பாரதிராஜா இயக்கிய “சிகப்பு ரோஜாக்கள்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கான முயற்சியில் இருந்தார். இத்திரைப்படத்திற்காக சிம்புவை அணுகி கதையும் கூறியிருந்தார். ஆனால் விசாகன் என்பவரை வைத்து இத்திரைப்படம் உருவாவதாக இருந்தது. இதற்கான அறிவிப்பும் 2015 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் அதற்குள் இறைவன் அவரை தனதாக்கிக்கொண்டார்.