சினிமாத்துறையினர் அஞ்சலி…
பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார். இந்நிகழ்வை தொடர்ந்து தமிழ் சினிமா கலைஞர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா “தாஜ்மஹால்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர். இவர் கதாநாயகனாக நடித்த “சமுத்திரம்”, “வருஷமெல்லாம் வசந்தம்” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனினும் அவர் தொடர்ந்து நடித்த திரைப்படங்கள் சற்று தோல்வியை கண்டதால் இவரது சினிமா கெரியர் பாதிக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு “மார்கழி திங்கள்” என்ற திரைப்படத்தில் இயக்குனராக உருமாறினார் மனோஜ். இத்திரைப்படம் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் விமர்சகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. இந்த நிலையில் நேற்று மாரடைப்பால் காலமானார் மனோஜ் பாரதிராஜா. இந்த நிகழ்வு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எந்திரன் படத்தில் மனோஜ்
“எந்திரன்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதில் ஒரு ரஜினி வேடத்திற்கு டூப் போட்டவர் மனோஜ் பாரதிராஜா. இந்த தகவல் பலராலும் அறியப்படாத தகவலாகும். “எந்திரன்” திரைப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில் மனோஜ் பாரதிராஜா ரஜினிகாந்துக்கு டூப் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.


