ஏ.ஆர்.முருகதாஸின் சிக்கந்தர்
கோலிவுட்டின் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பாலிவுட்டில் “சிக்கந்தர்” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட்டில் இயக்கியுள்ள நான்காவது திரைப்படமாகும்.

“சிக்கந்தர்” திரைப்படத்தில் சல்மான் கான் கதாநாயகனாகவும் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் சத்யராஜ், சர்மான் ஜோஷி, காஜல் அகர்வால், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி ரம்ஜானை முன்னிட்டு வெளிவரவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
உனக்கு என்ன பிரச்சனை?
அவ்விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் சல்மான் கான் பேசியபோது, “எனக்கும் ஹீரோயின் ராஷ்மிகாவிற்கும் 31 வயது வித்தியாசம் இருக்கிறது என விமர்சிக்கிறார்கள். ஹீரோயினுக்கும் அவரது தந்தைக்குமே இதில் எந்த பிரச்சனையும் இல்லாதபோது உங்களுக்கு என்ன பிரச்சனை?

ராஷ்மிகா பின்னாளில் திருமணம் செய்துகொண்ட பிறகு அவருக்கு மகள் பிறந்த பிறகு, அந்த மகள் வருங்காலத்தில் கதாநாயகியாக ஆன பிறகு அந்த மகளுடனும் நான் நடிப்பேன். அவரது தாயார் ராஷ்மிகாவின் அனுமதியோடு” என்று கூறினார். இவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.