சச்சின் ரீரிலீஸ்
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவந்த சச்சின் திரைப்படம் ஒரு Feel Good திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் அனைத்து பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார்.

முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி திரைப்படமாக உருவான இத்திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றியது. இந்த நிலையில் “சச்சின்” திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி இத்திரைப்படம் மறுவெளியீடு காண்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வெளியிட்டுள்ளார்.
விஜய் VS ரஜினிகாந்த் VS கமல்ஹாசன்
2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி விஜய்யின் “சச்சின்” திரைப்படம் ரஜினிகாந்தின் “சந்திரமுகி” திரைப்படத்துடனும் கமல்ஹாசனின் “மும்பை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்துடனும் போட்டி போட்டது. இதில் “சச்சின்” மற்றும் “சந்திரமுகி” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

வடிவேலு மிகவும் பிசியாக இருந்த காலகட்டம் அது. “சச்சின்”, “சந்திரமுகி” ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இப்போதும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தது. தற்போது “சச்சின்” திரைப்படம் மறு வெளியீடு காண உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.