எகிறும் எதிர்பார்ப்பு
அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பே கிடைத்தது. விறுவிறுப்பில்லாத திரைக்கதையும் மனதில் ஒட்டாத காட்சிகளுமே இத்திரைப்படத்திற்கு வரவேற்பு குறைந்ததற்கான காரணங்கள் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் ஏப்ரல் மாதம் அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் அஜித்குமாருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் மூன்று கதாபாத்திரங்களில் அஜித் தோன்றவுள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இத்திரைப்படத்தின் டீசரை பார்க்கும்போது இத்திரைப்படம் முழுக்க முழுக்க இரத்தம் தெறிக்கும் வகையில் உருவாகியுள்ள ஒரு கேங்கஸ்டர் திரைப்படம் எனவும் வியூகிக்க முடிகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு பிரபல பத்திரிக்கையில் பேட்டியளித்துள்ளார். அதில் இத்திரைப்படத்தை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
குட் பேட் அக்லி கதை இதுதான்…
அந்த வகையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் கதை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். “நம்ம எல்லோருக்குள்ளும் குட் பேட் அக்லி என மூன்று குணங்கள் இருக்கும். அவை வெளிவர சமயம் பார்த்து காத்திருக்கும். எந்த நேரம் எப்படி வெளிவரும் என்பதுதான் முக்கியம். அதுதான் இந்த படம்” என கூறியுள்ள அவர்,

“உலகம் குட் ஆக இருக்கும்போது நாமும் குட் ஆக இருக்கலாம். உலகம் பேட் ஆக இருந்தால் நாம் அக்லி ஆகத்தான் ஆகவேண்டும். இதுதான் இத்திரைப்படத்தின் ஐடியா. இதை வைத்துத்தான் கதை பயணமாகிறது” எனவும் அவர் கூறியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரனின் இப்பேட்டி ரசிகர்களுக்கு படம் குறித்த ஆவலை மேலும் தூண்டியுள்ளது.