மதிப்புமிக்க விருது
அமெரிக்கர்களால் அளிக்கப்படும் ஆஸ்கர் விருது உலகளவில் மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. இதுவரை இந்தியாவில் இருந்து “லகான்”, “தேவர் மகன்”, “நாயகன்” போன்ற பல திரைப்படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கடந்த ஆண்டு ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட இந்திய ஆவண திரைப்படமான “The Elephant Whisperers” ஆஸ்கர் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாது சத்யஜித் ரே, ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, கீரவாணி போன்ற பல இந்திய கலைஞர்கள் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் திரைப்படம் குறித்த தகவலைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
ஆஸ்கருக்குச் சென்ற முதல் தமிழ் படம்
1969 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த “தெய்வ மகன்” திரைப்படம்தான் முதன் முதலில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட தமிழ் திரைப்படம் என கூறப்படுகிறது. “தெய்வ மகன்” திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இதில் கதாநாயகியாக ஜெயலலிதா நடித்திருந்தார்.

மேலும் இவர்களுடன் மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.நம்பியார், நாகேஷ் உட்பட பலரும் நடித்திருந்தனர். கிளாசிக் திரைப்படமாக காலத்தை தாண்டியும் பேசப்படும் இத்திரைப்படத்தை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர்.