தவெக தலைவர் விஜய்
நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விஜய்யும் அவரது கட்சியினரும் போட்டியிட மிகுந்த ஆவலோடு நடைபோட்டுக்கொண்டிருக்கின்றனர். அதன்படி விஜய் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். நேற்று கூட சென்னையில் இஃப்தார் விருந்தில் இஸ்லாமியர்களோடு கலந்துகொண்டு அவர்களை சிறப்பித்தார். தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பின் முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கவுள்ளார் விஜய்.

ரஜினி VS விஜய்
சமீப காலமாக ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே இணையத்தில் வாக்குவாதங்கள் போய்க்கொண்டிருக்கிறது. “காக்கா”, “கழுகு” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி இரு தரப்பினரும் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். அந்த வகையில் நேயர் ஒருவர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம், “அரசியலில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆதரவு கொடுப்பாரா?” என்று ஒரு கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு சித்ரா லட்சுமணன், “ரஜினியை பொறுத்தவரை விஜய்க்கு தன்னுடைய ஆதரவை கொடுப்பதாக இருந்தால்கூட வெளிப்படையாக அதனை கூறுவாரா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.