தள்ளிப்போன விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி வெளியானது. ஆனால் இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிப்போய் பிப்ரவரி மாதம் வெளியானது.
லைகாவை மறைமுகமாக தாக்கினாரா?
இந்த நிலையில் விஜய்யின் “GOAT”, பிரதீப் ரங்கநாதனின் “டிராகன்” போன்ற திரைப்படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்திய பேட்டியில் பேசியபோது, “ஏஜிஎஸ் நிறுவனத்தில் Release Discipline என்ற ஒன்று மிகவும் முக்கியமான விஷயம். நாங்கள் ஒரு தேதியில் ஒரு திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்துவிட்டால் அந்த தேதியில் நிச்சயமாக அந்த படத்தை வெளியிடவேண்டும்.

ஏனென்றால் ஒரு தயாரிப்பாளராக மற்ற தயாரிப்பாளர்களையும் மதிக்க வேண்டும். ஒரு பெரிய படத்தை தயாரிக்கும்போது எங்களுக்கு பொறுப்பு என்று ஒன்று உண்டு. நாங்கள் ஒரு தேதியை அறிவித்தால் மற்ற தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களை வெளியிடும் தேதியை பற்றி திட்டமிடுவார்கள். நாங்கள் தேதியை அறிவித்துவிட்டு தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தால் மற்ற படங்களுக்கும் பாதிப்பு ஏற்படும்” என கூறினார். அர்ச்சனா கல்பாத்தியின் இந்த பேட்டி வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் “விடாமுயற்சி” படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தைத்தான் அர்ச்சனா மறைமுகமாக விமர்சித்துள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.