அன்னை இல்லம்
நடிகர் திலகமாக புகழ்பெற்ற சிவாஜி கணேசன் வாழ்ந்த இல்லமான அன்னை இல்லம் சென்னை தி.நகரில் அமைந்துள்ளது. இந்த அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்தி குறித்துதான் கடந்த இரண்டு நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏன் இந்த தீர்ப்பு…
சிவாஜி கணேசனின் பேரனான துஷ்யந்த் “ஈசன் புரொடக்சன்ஸ்” என்ற நிறுவனத்தின் மூலமாக “ஜகஜால கில்லாடி” என்று ஒரு திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
அந்த வகையில் இத்திரைப்படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் துஷ்யந்த் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.3.74 கோடி கடனாக பெற்றுள்ளார்.

இந்த கடனை திருப்பி செலுத்தாததால் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை திருப்பி தரவேண்டும் எனவும் “ஜகஜால கில்லாடி” திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனத்திடம் வழங்கவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
ஆனால் பட உரிமைகளை வழங்க துஷ்யந்த் தரப்பு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் சிவாஜி கணேசனின் வீட்டை பொது ஏலத்திற்கு விடக்கோரி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் துஷ்யந்த் நீதிமன்றத்தில் பதிலளிக்க கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.
ஆனால் துஷ்யந்த் தரப்பு நீதிமன்றத்தில் பதிலளிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உத்தரவை ரத்து செய்யவேண்டும்
இந்த நிலையில் “அன்னை இல்லம் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜப்தி உத்தரவுக்குள்ளான இல்லம் எனது சகோதரர் பிரபுவுக்கு சொந்தமானது” என சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளதாக சில நிமிடங்களுக்கு முன்பு செய்தி வெளியாகியுள்ளது. சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் மகனே துஷ்யந்த் என்பது குறிப்பிடத்தக்கது.