இந்தியாவின் டாப் நடிகை
சமீப காலமாக இந்திய சினிமாவின் டாப் கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். அவர் கதாநாயகியாக அறிமுகமானது “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம்தான். அதனை தொடர்ந்து சில கன்னட திரைப்படங்களில் நடித்த அவர், “கீதா கோவிந்தம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார்.
இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைய தென்னிந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே ராஷ்மிகா பிரபலமானார். இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன் பின் அவர் கன்னடத்தில் ஒரு திரைப்படத்தில் கூட நடிக்கவில்லை.

சொந்த ஊரை மறந்துட்டாரு…
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது, மிகப்பிரபலமான கன்னட திரைப்படமான “காந்தாரா” திரைப்படத்தை குறித்து பேச்சு வந்தது. அப்போது ராஷ்மிகா மந்தனா, தான் காந்தாரா திரைப்படத்தை பார்க்கவில்லை என கூறினார்.
ராஷ்மிகாவின் இந்த பதில் கர்நாடகா சினிமா ரசிகர்களை கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. தான் எங்கு இருந்து வந்தோம் என்பதை ராஷ்மிகா மறந்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்தன.

ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்…
இந்த நிலையில் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆன ரவிக்குமார் கவுடா என்பவரின் பேச்சு தற்போது சர்ச்சை ஆகி உள்ளது. “கிரிக் பார்டி என்னும் கன்னட திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, சர்வதேச திரைப்பட விழாவுக்கு வர மறுத்துள்ளார். 10 முதல் 12 முறை நேரில் சென்று அழைப்பு விடுத்தும் மதிக்கவில்லை. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த அவர், இந்த மாநிலத்தையே அவமதிக்கிறார். அவருக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்” என அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.