மேனேஜர் பெயரில் தில்லாலங்கடி
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வளர்ந்து வருகிறார் தனுஷ். தற்போது அவர் இயக்கியுள்ள “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்”, “இட்லி கடை” ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராக உள்ளன. இதில் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” திரைப்படம் வருகிற 21 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தில் பாவிஷ், ரபியா காட்டூன், ரம்யா ரங்கநாதன், வெங்கடேஷ் மேனன் போன்ற புது முகங்களும் இளம் நடிகர்களான அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் தனுஷின் மேனேஜர் பெயரை பயன்படுத்தி பல இளம்பெண்களிடம் மோசடி நடந்துள்ளது.

மர்ம நபர் மோசடி…
அதாவது யாரோ ஒரு மர்ம நபர் பல இளம்பெண்களுக்கு “நான் தனுஷின் மேனேஜர் பேசுகிறேன். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். அதற்காக பல புது முக நடிகைகளை தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளோம்” என கூறி ஆடிஷனுக்காக ஹோட்டலுக்கு வரச்சொல்லி மெசேஜ்ஜில் உரையாடி உள்ளாராம். சம்பந்தப்பட்ட பெண்கள் சந்தேகத்தின் பேரில் இதனை தனுஷின் மேனேஜரான ஸ்ரேயாஸ் கவனத்திற்கு கொண்டு செல்ல இது யாரோ மர்ம நபர் செய்த மோசடி என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து தனுஷின் மேனேஜரான ஸ்ரேயாஸ், தனது “X” தளத்தில் தனுஷின் நிறுவனத்தின் பெயரை சொல்லி மோசடி நடக்கிறது எனவும் இந்த தொலைப்பேசி எண் எனது தொலைப்பேசி எண் இல்லை எனவும் கூறி அப்பதிவில் அத்தொலைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீஸிடம் புகார் அளிக்கப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.