டிவி டூ சினிமா…
விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வருகிறார். அதுவும் குறிப்பாக தனது கெரியரின் தொடக்கத்தில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்திற்குப் பிறகு வித்தியாசமான கதைக்களத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார். “மாவீரன்”, “அமரன்”, “பராசக்தி” போன்ற திரைப்படங்களை இதற்கு உதாரணங்களாக கூறலாம்.

மாஸ் வெற்றி
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த “அமரன்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இத்திரைப்படத்தின் 100 ஆவது நாள் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், “அமரன் படத்திற்காக உங்களை மாற்றிக்கொண்டால் மிகப்பெரிய வெகுமதி ரசிகர்களிடம் கிடைக்கும் என சிவகார்த்திகேயனிடம் கூறினேன். நாம் சொல்வதை சொல்லிவிடுவோம் என்று நினைத்துக்கொண்டுதான் சொன்னேன். நிஜமாகவே அதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்தார். முக்கியமாக தன்னை செதுக்கிக்கொண்டார்.

முன்பெல்லாம் Bodybuilding என்று அதை கூறுவார்கள். இப்போதெல்லாம் பாடி பில்டர்கள் கூட அதனை ஒத்துக்கொள்வதில்லை. அதற்கு பெயர் Body Sculpting. தன்னை செதுக்கிக்கொள்ளுதல் என்று அர்த்தம். அதை அவர் புரிந்துகொண்டார். அட பரவாயில்லையே, ஊதா கலரு ரிப்பன்தான் இப்படிபட்ட ஆளா வந்து நிக்கிறாரா என்று சொல்லும் அளவுக்கு இருந்தார். நான் அட்வான்ஸ் கொடுக்கும்போது பார்த்த சிவகார்த்திகேயன் வேறு, படத்தில் Frame-ல் பார்த்த சிவகார்த்திகேயன் வேறு” என்று பாராட்டியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.