கே.ஆர்.விஜயா
நடிகை கே.ஆர்.விஜயா தமிழ் சினிமாவின் கிளாசிக் நடிகையாக வலம் வந்தவர். 1960களிலும் 1970களிலும் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த கே.ஆர்.விஜயா, ஒரு காலகட்டத்திற்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் பக்தி திரைப்படங்களில் அம்மன் வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த சமயங்களில் அவருக்கு நடந்த ஒரு சம்பவத்தை குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டதை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அம்மனாகவே பார்த்த ரசிகர்கள்!
கே.ஆர்.விஜயா அம்மன் வேடங்களில் நடிக்க தொடங்கியபோது ரசிகர்கள் பலரும் அவரை அம்மனாகவே பார்த்தார்கள். பொது இடங்களில் அவரை பார்க்கும்போதெல்லாம் அம்மனாகவே அவரை வணங்கி, அவர்களது குறைகளை கூறுவார்களாம். “நான் அம்மன் வேடங்களில்தான் நடிக்கிறேனே தவிர என்னை கடவுளாக பார்க்காதீர்கள்” என்று தனது ரசிகைகளிடம் கூறுவாராம்.

ஒரு நாள் அவர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வழிபட சென்றபோது, அங்கு வழிபட்டுக்கொண்டிருந்த ஒரு பெண்மணி இவரை பார்த்தவுடன், “கோயிலில் சினிமா ஷூட்டிங்கிற்கெல்லாம் அனுமதி கொடுத்தால் எப்படி நாங்கள் நிம்மதியாக சாமி கும்பிடுவது” என்று கோபத்தில் கத்தினாராம். அதற்கு கே.ஆர்.விஜயா, “நான் ஷூட்டிங்கிற்காக வரவில்லை. உங்களை மாதிரியே நானும் சாமி கும்பிடத்தான் வந்தேன்” என அமைதியாக பதிலளித்தாராம். அதன் பின் அந்த பெண்மணி கே.ஆர்.விஜயாவின் கையை பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்டாராம். அம்மன் வேடத்தில் நடித்ததால் இது போல் பல சங்கடத்திற்கு உள்ளாகியதாக ஒரு பேட்டியில் கே.ஆர்.விஜயா கூறியுள்ளாராம்.