தள்ளிப்போன விடாமுயற்சி
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என அறிவிக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றத்துக்குள் தள்ளியுள்ளது. குறிப்பாக புத்தாண்டு தினத்தன்று வெளியான இச்செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
10 படங்கள் ரிலீஸ்
கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக “விடாமுயற்சி” திரைப்படம் வெளியாகாது என அறிவிக்கப்பட்டதை ஒட்டி கிட்டத்தட்ட 8 சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளன. “வணங்கான்”, “கேம் சேஞ்சர்” போன்ற திரைப்படங்கள் ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 10 திரைப்படங்கள் வெளிவருகின்றன.

தள்ளிப்போன பெரிய திரைப்படங்கள்
“விடாமுயற்சி” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததை ஒட்டி பொங்கலுக்கு வெளிவரவிருந்த இரண்டு பெரிய திரைப்படங்கள் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம்.

சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு தயாராக இருந்ததாம். ஆனால் “விடாமுயற்சி” பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து “வீர தீர சூரன்” படக்குழு தங்களது முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.

அதே போல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் “ரெட்ரோ” திரைப்படத்தையும் பொங்கல் தினத்தை முட்டி வெளியிட படக்குழு திட்டம் தீட்டியதாம். ஆனால் பொங்கல் தினத்தை முன்னிட்டு “விடாமுயற்சி” வெளிவருவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து “ரெட்ரோ” திரைப்படத்தையும் தாமதமாக வெளியிட படக்குழு முடிவெடுத்ததாம். ஆனால் இதில் சோகம் என்னவெனில், “விடாமுயற்சி” திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை ஒட்டி விக்ரம், சூர்யா திரைப்படங்களும் பொங்கலுக்கு வரவில்லை, பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்ட “விடாமுயற்சி” திரைப்படமும் ரிலீஸ் ஆகவில்லை.