மரணித்த பெண்
கடந்த 5 ஆம் தேதி அல்லு அர்ஜூன் நடிப்பில் “புஷ்பா 2” திரைப்படம் வெளியான நிலையில் அதற்கு முந்தைய நாள் ஹைதராபாத் சந்தியா திரையரங்கத்தில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. அத்திரையிடலுக்கு அல்லு அர்ஜூன் வருகை புரிந்திருந்த நிலையில் அலைகடலென கூட்டம் கூடியது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற 35 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க அவரது 9 வயது மகன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அல்லு அர்ஜூன் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்றது. எனினும் அவர் ஒரே நாளில் ஜாமீனில் வெளிவந்தார்.

மாடியில் இருந்து குதித்த பெண்
இவ்வாறு “புஷ்பா 2” திரைப்படம் பார்க்க வந்த பெண் மரணித்த செய்தியின் சூடு இன்னும் ஆறாத நிலையில் தற்போது உத்தர பிரதேசம் வாரணாசியில் ஒரு மாணவி “புஷ்பா 2” திரைப்படம் பார்க்க அனுமதி மறுத்ததால் ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அம்மாணவி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருப்பவர் என கூறப்படுகிறது.
தன்னுடைய காதலனிடம் “புஷ்பா 2” திரைப்படத்தை காணவேண்டும் என கூற அதற்கு காதலன் மறுத்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அம்மாணவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து அப்பெண்ணின் காதலனை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.