கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5 ஆம் தேதி வெளியான “புஷ்பா 2” திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. எனினும் இந்த பிரம்மாண்ட வெற்றியுடன் அல்லு அர்ஜூனுக்கு ஒரு மிகப்பெரிய சிக்கலும் சேர்ந்து வந்தது. “புஷ்பா 2” திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கத்தில் பிரீமியர் ஷோ நடைபெற்றது. அந்த பிரீமியர் ஷோவிற்கு அல்லு அர்ஜூன் வருவதாக இருந்ததால் கூட்டம் அலை மோதியது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய ரேவதி என்ற பெண்ணும் அவரது மகனும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வெடிகுண்டு போல் வெடித்த விவகாரம்
கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழிந்த செய்தி காட்டுத் தீ போல் பரவ, அல்லு அர்ஜூன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் சந்தியா திரையரங்கு உரிமையாளர்கள் “எங்களுக்கு அல்லு அர்ஜூன் எங்கள் திரையரங்கத்திற்கு வருகிறார் என முன் கூட்டியே தெரியாது. அவரும் எங்களிடம் தெரிவிக்கவில்லை. ஆதலால்தான் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யவில்லை” என்று கூறியுள்ளனர். ஆனால் இந்த வாதத்தை அல்லு அர்ஜூன் தரப்பு மறுத்தது.
“காவல்துறைக்கும் திரையரங்கு உரிமையாளருக்கும் முன் கூட்டியே திரையரங்கிற்கு வருவேன் என தெரிவித்திருந்தேன்” என கூறி தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. ஆனால் அல்லு அர்ஜூன் கைது செய்யப்படவில்லை எனவும் இந்த விவகாரம் தொடர்பாக அவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும் அல்லு அர்ஜூன் தரப்பு கூறிவருகிறது.